மரச்செக்கு எண்ணெய் மகத்துவம்...
'வைத்தியருக்குக் கொடுக்கிற காசை, வாணிகருக்குக் கொடு’ இது, மரச் செக்கில் பிழியும் எண்ணெயின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழி. ‘கண்ட எண்ணெயைப் பயன்படுத்தி, பிணிக்கு ஆளாகி, வைத்தியம் பார்ப்பதைவிட, செக்கு மூலமாக தயாரிக்கப்படும் தரமான எண்ணெயை வாங்கி ஆரோக்கியத்தைப் பேணுவதே மேல்’ என்பதுதான் இந்தப் பழமொழியின் பொருள்.
நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பர்யமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தை ஏற்பதுதான் நாகரிகம் என நினைக்கிறோம். அதனால் நாம் இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படி இழந்தவற்றில் முக்கியமானது மரச் செக்கில் பிழியும் எண்ணெய்.
மரச்செக்குகளில் ஆட்டிப் பிழியப்படும் எண்ணெய் உடலுக்கு நல்லது. ஆனால், ‘ரோட்டரி’ எனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களின் வருகையால் மரச் செக்குகள் வழக்கொழிந்துவிட்டன. மரச் செக்கு எண்ணெயின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள், அது எங்கு கிடைக்கும் எனத் தேடி அலைகிறார்கள். குறிப்பாக, இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நேசிப்பவர்கள், தாங்கள் உற்பத்திசெய்த எள், நிலக்கடலை, கொப்பரைத் தேங்காய் உள்ளிட்டவற்றை ஆட்டுவதற்கு மரச்செக்கைத் தேடி அலைகிறார்கள்.

No comments:
Post a Comment